எங்களைப் பற்றி
சாமுவேந்தர் அறக்கட்டளை
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”
- என்ற வரிகளுக்கேற்ப, இயற்கையாகவே தர்மசிந்தனை கொண்ட தம்பதி தெய்வத்திருவாளர்கள் பெருமாள் (இரயில்வே) – வெளக்கியம்மாள் (விளக்கி) அவர்களை அடிப்படையாக வைத்தே அறக்கட்டளை உருவாக்கப்பட்டது என்றால் அது மிகையாகாது. 09.01.1942 அன்று நிலக்கோட்டை வட்டம், சாண்ட்லர்புரம் என்ற கிராமத்தில் சுருளி-வெள்ளையம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த அன்னார் இரயில்வே துறையில் சாதாரண ஊழியராக பணியில் சேர்ந்தார்.
- தனது கடின உழைப்பால் படிப்படியாக முன்னேற்றமடைந்து பணியில் நேர்மையுடனும், விடுமுறை எடுக்காமல் பணி செய்ததுடன், துறை ரீதியான பணி நேர்த்தியால் பல பாராட்டு சான்றிதழ்களை பெற்றுள்ளார். ஊழியர்களிடம் கனிவுடனும், கண்டிப்புடனும் பணியாற்றி 2002 அன்று ஓய்வு பெற்றார். வள்ளுவனுக்கேற்ற வாசுகி போல அவருடைய மனைவி வெளக்கியம்மாள் அவர் செய்த நற்செயல்களுக்கு அவருக்கு உறுதுணையாக இருந்து வந்தார். மனைவியின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே ஒருவரால் மற்றவர்களுக்கு உதவ முடியும். கணவன் மனைவி இருவரும் பார்ப்பவர்கள் அனைவரிடத்திலும் உள்ளன்போடும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மரியாதையோடும், பண்போடும் பழகக் கூடியவர்கள்.
- அவர்கள் தனக்கு கிடைத்த வருமானத்தில், வாடும் முகத்தை பார்த்தே இருவரும் சலிக்காமல் பசியால் இருந்த பலருக்கு உணவு வழங்கி வந்துள்ளனர். பலருக்கு உணவு தானே சமைத்து வழங்கியும், அரிசி, தானிய வகைகள், தன்னால் முடிந்த பண உதவியும் ஒரு நாள் மட்டும் இல்லாமல் அவர்கள் ஓரளவிற்கு முன்னேற்றமடையும் வரை செய்து வந்துள்ளனர். மர வேலைப்பாடுகள், கட்டிட திறமை, பெயிண்டிங், விவசாயம் செய்தல், சிறு வேலை உபகரணங்கள் செய்தல் என பல்திறமை பெற்ற கடின உழைப்பாளியான அவர் பணிஓய்விற்கு பின், கிராமத்தில் பல மரக்கன்றுகளை நட்டு தினமும் தண்ணீர் ஊற்றி பல மரங்களை உருவாக்கியும், மண்வெட்டியால் தானே ஊர் கால்வாய்களை தூர்வாருவது, குப்பைகளை அப்புறப்படுத்துவது போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளையும், ஊரில் பல நல்ல காரியங்களை செய்ததுடன், கோயில் சார்பில் முக்கிய பொறுப்பில் இருந்து பல சேவைகளை செய்துள்ளார்.
- மேலும் பம்பரம் போல் சுழன்று தனது 80 வயதிலும் 10 இளைஞர்கள் செய்யும் வேலைகளை அவரே செய்து கடின உழைப்பாளியாக திகழ்ந்துள்ளார். ஓய்வென்பதை விரும்பாதவர்.
- ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின் ஒரு பெண் இருக்கிறார் என்பதற்கேற்ப 14.08.2015 அன்று தனது அன்பு மனைவி காலமாகிய பின்னர் அவரது நினைவாக இன்னும் அதிக உழைப்புடன் தன் வாழ்நாள் இறுதி வரை சேவையாற்றி வந்த அன்னார் 25.10.2023 அன்று இறைவனடி சேர்ந்து அவர் குடும்பத்தையும், அவர் அன்புக்குரியவர்களையும் மீளாத்துயரில் ஆழ்த்தி சென்றுவிட்டார். அன்னாரின் பூதவுடலுக்கு மரியாதை செய்ய வந்த “எங்களை வாழவைத்த அன்புத்தந்தை போய்விட்டாரே” என்ற அழுகுரல் மட்டுமல்ல, அன்னாரின் சேவைகளை கூறும்போது, இன்னும் மக்களுக்கு நற்செயல்களை செய்ய வேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது. நற்செயல்கள் செய்வதற்காக அவர் மாதம் தவறாமல் ஒரு குறிப்பிட்ட தொகையை அறக்கட்டளைக்கு தன் வாழ்நாள் இறுதி வரை வழங்கி வந்தார்.
- தெய்வத்திருவாளர்கள் பெருமாள் (இரயில்வே) – வெளக்கியம்மாள் அவர்களின் தாரக மந்திரமான “அன்பினால் மட்டுமே எதையும் வெல்ல முடியும்” என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த அறக்கட்டளை சேவைப்பணிகளை தொடரும்.

அன்பு தானே எல்லாம் அன்பே சிவம்

அறக்கட்டளை தினம்
- பெருமாள் (இரயில்வே) அவர்கள் இறைவனடி சேர்ந்த அக்டோபர் 25 அன்று – 25.10.2023 ஒவ்வொரு ஆண்டும் அறக்கட்டளை தினமாகிறது
- திரு.பெருமாள் அவர்கள் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் தெ.சுருதி அவர்களிடம் நற்செயல்கள் செய்வதற்காக பொருளுதவி வழங்கியபோது மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினராக இணைந்த போது. அவர் மேலும் மாதந்தோறும் தவறாமல் ஒரு குறிப்பிட்ட தொகையை அறக்கட்டளைக்கு தன் வாழ்நாள் இறுதி வரை வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.